இசையுடன் நான்.....

இசையுடன் நான்.....

Monday, April 23, 2012

இளையராஜா இசைமைத்த ஒரு படம்...!

இளையராஜா இசைமைத்த ஒரு படம். பாட்டுக்கு மெட்டுப் போட்டாயிற்று. சித்ராவிற்கும் பாடிக் காட்டியாயிற்று. வாத்தியக்காரர்களை ஒருங்கிணைத்து எப்படியான இசைக் கோர்வை பாட்டில் வரவேண்டும் என்று இளையராஜா எதிர்பார்த்ததையும் வாத்தியக்காரர்களுக்குச் சொல்லியாயிற்று. சரி, இனிப் பாடல் ஒலிப்பதிவுக்கு முன் ஒத்திகை ஆரம்பமாயிற்று.

குறித்த பாடலின் இடையில் வரும் ஆர்மோனிய வாத்திய வாசிப்பை ஆர்மோனியக்காரர் வாசிக்கின்றார். ஆன...ால் ராஜா மனதில் எதிர்பார்த்தது ஏனோ அதில் மிஸ்ஸிங். மீண்டும் மீண்டும் இளையராஜா, குறித்த வாத்தியக்காரரை அந்த இசையை வாசிக்கச் சொல்லிக் கேட்கின்றார். ம்ஹீம், ராஜா எதிர்பார்த்த அந்தச் சங்கதி வரவேயில்லை.
இளையராஜா ஆர்மோனியத்தை வாங்கிக் கொள்கின்றார். நேராக ஒலிப்பதிவு ஆரம்பம். சித்ரா பாடுகின்றார். மற்றைய வாத்தியங்கள் சங்கமிக்க, இளையராஜாவே நேரடியாக ஆர்மோனியத்தை வாசிக்க, அவர் எதிர்பார்த்த அந்தச் சங்கதியே ராஜாவின் வாசிப்பில் பாடலாக ஒலிப்பதிவு செய்யப்படுகின்றது. இந்தப் பாட்டினை அணு அணுவாக ரசிப்பவர்களுக்கு உண்மையில் ராஜா வேண்டிக் கேட்ட அந்த அற்புத ஆர்மோனிய வாசிப்பின் தாற்பர்யம் புரியும். வளைந்து நெளிந்து குழைந்து என்னமாய் பிரவாகிக்கின்றது இந்த இசை.

கீதாஞ்சலி என்று தெலுங்கிலும் இதயத்தைத் திருடாதே என்று தமிழிலும் வந்த படத்தில் "ஜல்லந்த" என்று தெலுங்கு பாடி தமிழில் "ஆத்தாடி அம்மாடி தேன்மொட்டு தான்" என்றும் வந்த பாட்டு.